முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.மு.க. அரசு – தமுமுக கடும் கண்டனம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை:
தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக நேற்று (09.12.10) போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதிகளைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது.
போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்திரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.
சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர்களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பதுபோல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்க செய்து பத்திரிகைகளில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.
உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?
தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள்ளதற்கு தமுமுக வன்மையானக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக